சென்னை: சுவீடனைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அந்நாட்டின் தூதர் தெரிவித்துள்ளார்.
தமிழகம், அனைத்துலக நிறுவனங்களிடமிருந்து தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்ஃபில் மற்றும் இக்கியா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.84 லட்சம் கோடி) பொருளியல் மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை அது ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, சுவீடன் நாட்டு நிறுவனங்களுடன் தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு ஆகியோர் சென்னையில் பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கான சுவீடன் நாட்டு துாதர் ஜேன் தெஸ்லெஃப் மற்றும் சுவீடனைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த நிலையில் இக்கியா உட்பட நான்கு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக திரு ஜேன் தெஸ்லெஃப் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 70 சுவீடன் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் ஏறக்குறைய 25,000 பேர் பணி புரிகின்றனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுவீடன் நிறுவனங்களில் சில தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.