சென்னை: தைவானிய ஒப்பந்தத் தயாரிப்புப் பெருநிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி (S$2.23 பில்லி[Ϟ]யன்) முதலீடு செய்யவிருக்கிறது என்றும் அதன்மூலம் மதிப்புமிக்க 14,000 வேலைகள் உருவாக்கப்படும் என்றும் தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்தின் ஆகப் பெரிய பொறியியல் வேலை உருவாக்கக் கடப்பாடு என்றும் மாநிலத்தின் மின்னணு, நவீன தயாரிப்புத் துறைக்குப் பெரிய ஊக்குவிப்பு என்றும் திங்கட்கிழமை (அக்டோபர் 13) எக்ஸ் சமூக ஊடகம் வழியாக அமைச்சர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
“ஃபாக்ஸ்கான் தனது அடுத்த மதிப்புக் கூட்டல் தயாரிப்பு, ஆய்வு மற்றும் உருவாக்க ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயல்பாடுகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரவுள்ளது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டிற்கான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பேராளர் ராபர்ட் வு, முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார் என்றும் அப்போது, கணிசமான முதலீட்டுக் கடப்பாடுகளுடன் தமிழ்நாடுமீது கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை அவர் மறுவுறுதிப்படுத்தினார்,” என்று அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக ‘ஃபாக்ஸ்கான் மேசை’யை தமிழக முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான ‘கைடன்ஸ்’ அமைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்மூலம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்குத் தடையற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் விரைவான செயல்பாடும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை திரு வு பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, கர்நாடகத்தில் ஃபாக்ஸ்கானின் இருப்பை வலுப்படுத்துவது குறித்தும் தயாரிப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கு புதிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் ஃபாக்ஸ்கான் செயல்பட்டு வருகிறது.