மதுரை: ராமேஸ்வரத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில் பெரும் குறைபாடுகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பாலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து முடிவடைந்துள்ள நிலையில், கடந்த நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வுசெய்து அதன் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், கட்டுமானத்தின்போது நடந்த மோசடி மற்றும் விதிமுறை மீறல்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி கடுமையாக சாடியுள்ளார்.
பாம்பன் ரயில் பாலத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறியிருந்தார். அதாவது, புதிதாகப் பாலம் கட்டத் திட்டமிடும் முன்பாக ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
இந்தப் பாலத்தில் ரயிலை இயக்கியும் சோதனை நடத்தப்பட்டது. பாலத்தில் அரிமானம், துருப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் இல்லை. தற்போதே அரிமானம் ஏற்படத் தொடங்கியுள்ளது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாம்பன் ரயில் பாலத்தில் பிரச்சினைகளைச் சீர் செய்தபிறகுதான் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வலுத்து வருகிறது.
எம்.பி. சு.வெங்கடேசன்
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாம்பன் பாலம் கட்டப்பட்டதில் முறையான விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை. அதனால் அப்பாலத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமானத் தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் நாள்தோறும் பயணம் செல்ல உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்தும் செயலாகும். ரெயில்வே அமைச்சு எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அந்தத் துறையின் அமைச்சர் நாட்டு மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்று திரு சு.வெங்கடேசன் தெரிவிததுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பிடம் (RDSO) இருந்து ஒப்புதல் பெறாமல் மாறுபட்ட வடிவமைப்பு விதிமுறைகளைக் கையாண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர்.டி.எஸ்.ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்த காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்கவில்லை. ரெயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிஷ்டமானது,” என்று ஆணையர் கண்டித்துள்ளார்.
மேலும் பாலத்திற்கான இரும்புப் படிமங்கள் கூட தரநிர்ணய அமைப்பிடம் கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமான செயல். எல்லா வேலையும் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமைப் பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18.10.2024ஆம் தேதி பெற்றனர்.
இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தைப் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று திரு சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.