தூத்துக்குடி: கருப்பட்டியில் சர்க்கரையைக் கலந்து விற்பனை செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உடன்குடியைச் சேர்ந்த ஐந்து வணிகர்களுக்கு 38 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்கள் அந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடன்குடி பகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் சர்க்கரை மூட்டைகளை வணிகர்கள் கொள்முதல் செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை அப்பகுதி வணிகர்கள் கொள்முதல் செய்ததும் பதநீரில் 60 முதல் 70 விழுக்காடுவரை சர்க்கரையைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி கடந்த ஆறு ஆண்டுகளாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.
சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 விழுக்காடு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தாமல், 5 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே செலுத்தி இதுவரை ரூ.6 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் வணிகர்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் மொத்தமுள்ள கிட்டத்தட்ட 10.2 கோடி பனை மரங்களில் பாதியளவுக்கு மேல், அதாவது 5.19 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக தென்மாவட்டங்களில் செறிந்துள்ளன. தூத்துக்குடியில் ஏறக்குறைய 1 கோடி பனை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த பனைப் பொருள்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டுப் பங்களிப்பைத் தூத்துக்குடி வழங்குகிறது.
தமிழகத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான டன் கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. தனித்துவமான மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அங்குப் பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2017ஆம் ஆண்டு பதநீரிலிருந்து தயாரிக்கப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்படும் அசல் கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளித்தது. எனினும், அவற்றைக் கடைகளில் விற்பனை செய்யும்போது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது.
பதநீரில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டு போன்றவற்றுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
“உடன்குடியில் பெரும்பாலானோர் சீனி கலந்துதான் கருப்பட்டி தயாரித்து ஏமாற்றி வருகின்றனர். 10, 15 பேர்தான் அசல் கருப்பட்டி காய்ச்சி தயாரிக்கின்றனர். கருப்பட்டி கலப்படத்துக்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வரி ஏய்ப்பு மோசடிக்காக மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், மோசடி செய்தவர்கள் விவரங்களை அதிகாரிகள்வெளியிடவில்லை,” என்று அப்பகுதியின் கருப்பட்டி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.


