சென்னை புத்தகக் காட்சிக்கு இலவச அனுமதி

2 mins read
0475c447-f9d5-4e4a-8560-a25966293e48
சென்னை ஒய்எம்சிஏ திடலில் 49 வது புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கமும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் 49வது புத்தக விழா ஜனவரி 8ஆம் தேதி தொடங்குகிறது.

ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வயிரவன் ஆகியோர் புத்தகக் காட்சி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினர்.

அதிகமான வாசகர்களை ஈர்க்கும் வகையில் இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. புத்தகக் காட்சிக்கு வருகை தரும் வாசகர்கள் நுழைவாயிலில் பெயரை பதிவு செய்தால் போதும், கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர். சென்ற ஆண்டு நுழைவுக்கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது.

அஞ்சல் துறை சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்படும்.

புத்தகக் காட்சி நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். தமிழ் மொழிப் புத்தகங்களுக்காக 428 அரங்குகளும் ஆங்கில மொழிப் புத்தக அரங்குகள் 256, பொது அரங்குகள் 24 உள்பட மொத்தம் 1,000 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.

ஜனவரி 12ஆம் தேதி பள்ளி மாணவர்கள் 3,000 பங்கேற்கும் `சென்னை வாசிக்கிறது’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அத்துடன் புத்தகக் காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் ரத்த தான முகாம் நடைபெறும்.

ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் நிறைவுநாள் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.

தமிழக அரசின் மின்சாரத் துறை சார்பில் சூரிய சக்தி மின்சாரம் குறித்த விவரங்களை அங்கு தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பு அங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சிக்கு வருபவர்களின் வசதிக்காக, சைதாப்பேட்டைக்கும் புத்தகக் காட்சி நடக்கும் இடத்திற்கும் இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்