சென்னை: வாக்களிப்பு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சாதாரணக் கட்டணங்களைக் கொண்ட பேருந்துகளில் அவர்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படுவதாக அது கூறியுள்ளது.
கட்டணமில்லாப் பயணம் குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு நாளன்று மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த மாநகர் போக்குவரத்துக் கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணமின்றி பயணம் செய்யலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அத்தகைய பேருந்துகளில் பயணம் செய்யும்போது வயதுச் சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து, கட்டணமில்லாப் பயணச்சீட்டை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம்.
“அதேபோல, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வாக்களிக்கச் செல்லும்போது, யுடிஐடி அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லாப் பயணச் சீட்டைப் பெற்று பயணம் செய்யலாம்.
“வாக்களிப்பு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மட்டுமே இந்த இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்,” என்று பிரபு சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

