சென்னை: சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு அடுத்த 6 மாதம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான பயண அட்டை டிசம்பர் 21ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில், ஒரு மாதத்துக்கு 10 பயண அட்டைகள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 வரை வழங்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண அட்டை, அடையாள அட்டைகளை புதிதாகப் பெற இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, வயதுச் சான்று, இரு வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இத்திட்டத்தின் வாயிலாகப் பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள் அடையாள அட்டையுடன் தற்போதைய கடப்பிதழ் (பாஸ்போர்ட்) அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.