இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.38 கோடியில் தமிழக அரசு திட்டம்

1 முதல் 14 வயதுப் பெண் பிள்ளைகளுக்கு இலவசமாக புற்றுநோய்த் தடுப்பூசி

2 mins read
393d0b40-8bfd-4f86-bf42-1539860898a9
சென்னை தீவுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய பிள்ளைகளுக்கு விரைவில் புற்றுநோய்த் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“பல்வேறு நாடுகள் புற்றுநோயை தடுப்பூசி மூலம் குணப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புற்றுநோய் தொடர்பான திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

“அதாவது, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு புற்றுநோய்த் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது,” என்று திரு சுப்பிரமணியன் கூறினார்.

“புற்றுநோய்த் தடுப்பூசி வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு இலவசத் தடுப்பூசி திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிந்த பின்னர், இந்த திட்டம் அமலுக்கு வரும். புற்றுநோய் தடுப்பூசியை அனைத்து தரப்பு மக்களும் செலுத்திக் கொள்ளும் வகையில், இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

சென்னை தீவுத்திடலில் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பில் நடைபெற்ற 16வது ஆண்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்து மா.சுப்பிரமணியன் பேசினார்.

தடுப்பூசி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இளம் பெண்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதியையும் அவர் வலியுறுத்தினார்.

அரசு விரைவில் தொடங்கவுள்ள இந்த இலவசத் தடுப்பூசித் திட்டம், இளம் பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு பெரும் படியாக அமையும் என்றார் அவர்.

தனியார் மருத்துவமனையில் இதற்கு கிட்டத்தட்ட ரூ.15,000 செலவாகும்; அரசின் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்