70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லாச் சிகிச்சை: தமிழக அரசு

70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லாச் சிகிச்சை: தமிழக அரசு

கோப்புப் படம்:

25 Nov 2026 - 6:46 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் 70 வயது நிரம்பிய ஏறக்குறைய 38 லட்சம் முதியவர்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி அரசு காப்பீட்டின்கீழ் கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது சுகாதார அமைச்சர் அருண்ராஜ் அறிவித்த முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கெனவே இணைந்துள்ள 70 வயதுக்கு மேற்பட்டோரும் அதில் இடம்பெறாத மற்ற முதியவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.

புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை, உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

புதிதாக இணையும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.849 வீதம் காப்பீட்டுத் தவணைத் தொகை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு புதிய காப்பீட்டு நிறுவனத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்போது பிரிமியம் தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்கள, பிற பதிவு மையங்கள் வாயிலாக பயனாளிகள் சேர்க்கை நடைபெறும். சேர்க்கைக்கு முன்பு விவரங்களை முறையாகச் சரிபார்க்கவும், முதல்வர் காப்பீடு, ஆயுஷ்மான் பாரத் திட்டங்களுடன் இரட்டைப் பலன் கிடைக்காதவாறு உறுதி செய்யவும் திட்ட இயக்குநருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நிதித்துறையின் ஒப்புதலுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்