1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

1 mins read
bb7e2b84-dfe0-426b-9f03-df47da0f260b
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 5,654 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 5,287,000 பேர் பயன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார் மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஒட்டுமொத்த மக்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது, அவர்களுடைய உடலில் உள்ள நோய் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பது என்கின்ற வகையில் ஒரு திட்டத்தை வரவு செலவு திட்ட அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

“இந்தத் திட்டத்திற்கு புதிய பெயர் விரைவில் சூட்டப்படும். மிக விரைவில் சென்னையில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்தத் திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவம், 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

மேலும், முழு உடல் பரிசோதனைக்கு தேவையான ஒட்டுமொத்த பரிசோதனைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்படும் என்றும், 1,231 தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளதால் அவையும் இந்தப் புதிய முகாம்களில் இணையவுள்ளன என்றும் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 5,654 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் 5,287,000 பேர் பயன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.12,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அரசு மருத்துவமனைகளில்

ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மட்டுமே செலவாகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்