மதுரை: தமிழக உள்கட்டமைப்புக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், மத்திய அரசின் ரயில்வே வரவு செலவு அறிக்கையில் தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்துக்கான நெடுஞ்சாலைத் திட்டங்களிலும் மத்திய அரசு அதிக அளவில் முதலீடு செய்திருப்பதாகப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
நடப்பு வரவு செலவு அறிக்கையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே பெங்களூரு-சென்னை, ஹைதராபாத்-சென்னை இடையேயான புல்லட் ரயில் வழித்தடத் திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும் இது இப்பகுதிகளின் பொருளியல் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரயில்வே துறையின் பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், பொறியியல் சிறப்புத் தன்மைக்குச் சிறந்த அடையாளம் என்றார்.
ஒன்பது வந்தே பாரத் ரயில்கள், ஒன்பது அம்ரித் பாரத் ரயில்கள் தமிழக மக்களுக்காக சேவையாற்றுகின்றன என்றும் இந்த ரயில்களுக்கான பெட்டிகள் அனைத்தும் சென்னையில் தயாராகின்றன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
“இதனால் மேக் இன் இந்தியா திட்டம் சுயசார்பை வலுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கிறது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கும்பகோணம், ஏற்காடு பகுதிகளில் வானொலி நிலையங்களைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி,” என்றார் திரு மோடி.
தொடர்புடைய செய்திகள்
தமிழகம் வளமான வரலாறு, பாரம்பரியத்துக்குச் சொந்தமான மாநிலம் என்றும் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், உலகளாவிய மரபுசார் இடங்களாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், புலிகாட் ஏரி, பொதிகை மலை போன்ற இடங்களைச் சுற்றி, சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் இத்திட்டம் இளையர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
தமிழகத்தை முன்னேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்றும் 2024க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் அனைவரும் ஒன்றிணைக்கப்படுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

