சென்னை: அரசியல் விமர்சகரும் பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் விசாரணைக்கு முன்னிலையாகாததால், அவரைக் கைதுசெய்ய மதுரைப் போதைப் பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து காவலர்கள், சென்னையில் சவுக்கு சங்கரைக் கைது செய்து மதுரைக்குக் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அவதூறாகப் பேசியதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக சென்னை காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
விசாரணையில், சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை மதுரை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரிடம் காவல்துறை வெள்ளிக்கிழமை வழங்கியது. இந்தப் புதிய வழக்குத் தொடர்பாக அவரை விரைவில் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் காவலர்கள் முன்னிலையாக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.