தைலாபுரம்: பாமக நிறுவனர் ராமதாசும் அக்கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே. மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாமக தலைவர் பதவி குறித்து அண்மையில் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
“பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தைத் தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.
“தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்,” என்று வியாழக்கிழமை ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாகத் தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காகத் தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று என்று குறிப்பிட்டார்.
“நேற்றுதான் (வியாழக்கிழமை) ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் அவரைச் சந்திக்கவில்லை. ராமதாசும் அன்புமணியும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.