விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) இளையரணித் தலைவராக ஜிகே மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று மகிழ்ச்சியான நாள், எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் நாள். நான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் ஒருவர் தமிழ்க்குமரன். தமிழ்க்குமரனை பாமக இளையரணித் தலைவராக நியமனம் செய்கிறேன்.
“ஏற்கெனவே அந்தப் பதவியில் தமிழ்க்குமரனை நியமித்தபோது அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்தார்.
“அதன் பிறகு கடந்த ஆண்டு பொதுக்குழுவில் என் மூன்றாவது பேரன் முகுந்தனுக்கு இளையர் சங்கத் தலைவர் பொறுப்பை வழங்கினேன். அப்போதுதான் மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி.
“இப்போது மீண்டும் தமிழ்க்குமரனை இளையரணித் தலைவராக்கியுள்ளேன். அவர் இந்தப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார்,” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக முன்னாள் தலைவரான ஜிகே மணியின் மகனான தமிழ்க்குமரனை இளையரணித் தலைவராக நியமிக்கும் கடிதத்தை, பாமக நிறுவனர் ராமதாசும் அவரின் மகள் காந்திமதியும் வழங்கினர்.
லைக்கா திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரியாக தமிழ்க்குமரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

