சேலம்: சமையல் எரிவாயு உருளை வெடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நாவலூர் மேற்குகாடு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். அவரது மனைவி கவிதா.
இருவரும் புதன்கிழமை (நவம்பர் 6) அதிகாலை கோவிலுக்குச் சென்றதால், கவிதாவின் தாய் காந்தியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சமையல் எரிவாயு உருளையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
விழிப்படைந்த காந்தி அம்மாளும் அவரது பேரனும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.
தொடர்ந்து எரிந்த சமையல் எரிவாயு உருளை, பலத்த சத்தத்துடன் வெடித்தது.
அதனால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரம், வீட்டில் இருந்த மற்றோர் எரிவாயு உருளையும் வெடித்தது.
தீயை அணைக்க முயன்ற தமிழ்ச்செல்வன், 40, சிரஞ்சீவி, 67, சக்திவேல், 45, ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அக்கம்பக்கத்தில் இருந்த அந்த மூவரும் தீயை அணைக்க உதவி செய்ய வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்தத் தீவிபத்து குறித்து தலைவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் .