எரிவாயுக் கலன் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு தமிழக அரசு மின் கட்டணச் சலுகை

எரிவாயுக் கலன் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு தமிழக அரசு மின் கட்டணச் சலுகை

2 mins read
8671eaf9-7963-452e-a202-94fd9fc0c940
தேநீர் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: சமயம்

சென்னை: நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள வேளையில், உணவகங்களுக்கும் தேநீர் கடைகளுக்கும் தமிழக அரசு மின்சாரக் கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (மார்ச் 14) அறிவித்தார்.

உணவு தயாரிக்கும் உணவகங்கள் எரிவாயுவுக்குப் பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மின்சார மானியம் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

எரிவாயுத் தட்டுப்பாட்டைச் சீர்செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உணவகங்களில் எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என்று ஆராயப்படாது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 விழுக்காடு, அதிகபட்சமாக ரூ.3.05 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

மேலும், தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவின்றி மாற்று எரிவாயுவை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் எரிவாயுக் கலன்களுக்கான தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “எரிவாயுவுக்குப் பதில் மின் அடுப்பு பயன்படுத்துவதற்காக யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியமாக வழங்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு இருக்கும் வரை இந்தச் சலுகை தொடரும்,” என்று தெரிவித்தனர்.

பொது விநியோகத் திட்டத்தில் 3,228 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்