நெல்லை: அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் ஈரான், அமெரிக்கா இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிக ரீதியிலான எரிவாயுகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தத் தட்டுப்பாடு தற்போது திருநெல்வேலியின் புகழ்பெற்ற அல்வா தயாரிப்புத் தொழிலையும் முடக்கியுள்ளது.
திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ கடை, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாகத் தனது அல்வா தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
“அல்வா தயாரிப்பில் ஈடுபட தினமும் எட்டு முதல் ஒன்பது வணிக எரிவாயு உருளைத் தேவைப்படும் நிலையில், தற்போது மூன்று அல்லது நான்கு எரிவாயு உருளைகள் மட்டுமே கிடைக்கின்றன. கையிருப்பும் தீர்ந்துவிட்டதால் அல்வா தயாரிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என அக்கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள புகழ்பெற்ற ‘இருட்டுக்கடை அல்வா’ கடை, ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிப்பில் ஈடுபட்டாலும், மூலப்பொருள்கள், இதர செலவுகள் அதிகரித்துள்ளதால் அல்வா விலையை உயர்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற சிறிய அல்வா கடைகளும் தங்களின் உற்பத்தியை 50 விழுக்காடு வரை குறைத்துள்ளன. பல கடைகள் விறகு அடுப்புகளுக்கு மாற முயன்றாலும், குடியிருப்புப் பகுதிகளில் புகை குறித்த புகார்கள் எழும் என்பதால் அந்த முயற்சியும் சவாலாக உள்ளது.

