ஜெம் வீரமணி, கூட்டாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

ஜெம் வீரமணி, கூட்டாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

படம்: தினமலர்

02 Oct 2026 - 7:01 pm

2 mins read

சென்னை: ஏழைச் சிறுமிகளுக்குக் கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி, அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி, அவரது கூட்டாளிகள்மீது சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட வீரமணியுடன் அவருக்குத் துணையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், உதவியாளர் கணேசன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் படம்பிடித்து வீரமணியை மிரட்டி, சில நபர்கள் கோடிக்கணக்கில் பணம் பறித்த தகவல்களும் விசாரணையில் வெளிவந்துள்ளன.

இவ்வழக்கின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, தமிழகக் காவல்துறை தலைவர் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையில், பெண் அதிகாரிகள் அடங்கிய இக்குழுவினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வீரமணி மீது இதுவரை நான்கு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க ஏதுவாக காவல்துறை சார்பில் சிறப்பு கைபேசி எண் (93453 19676) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு வருகிறது.

குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வீரமணியின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்