விஜய் வழி ‘ஜென்-ஸி’ இளையர்கள்

விஜய் வழி ‘ஜென்-ஸி’ இளையர்கள்

3 mins read
13fd8d15-552d-4968-92d4-7d86579acdd7
விஜய்யைப் பின்தொடர்ந்து களப்பணிகளில் இறங்கும் இளையர்கள், அரசியல் அனுபவத்தை மெல்ல பெற்றுவருவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். - படம்: செயற்கை நுண்ணறிவு

தெற்காசியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கும் ஆட்சிக்கவிழ்ப்புக்கும் கொடியேந்தி வழிநடத்திய ‘ஜென்-ஸி’ தலைமுறையினர், தமிழகத்தில் இரண்டே நாளில் வரவிருக்கும் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் 19 விழுக்காட்டு வாக்குகள், 29 வயதுக்குக் கீழ் இருப்பவர்களின் கையில் உள்ளன. எண்ணிக்கை அளவில் இது சிறுபான்மைபோலத் தோன்றினாலும் கடும் போட்டி நிலவும் சில தொகுதிகளில் இத்தலைமுறையினரின் வாக்குகள் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ‘ஜென்-ஸி’ தலைமுறையினரின் பிள்ளைப்பருவம் முதல் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ முதலிய படங்களில் வீரக் கதாநாயகனாக விளங்கிய விஜய், தமது நடிப்பினால் பலரது உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆயினும், தமிழகத்தில் நிலவும் குறிப்பிட்ட சூழ்நிலைக் காரணங்கள் விஜய் மீதான இவர்களின் ஈடுபாட்டை முடுக்கிவிடுவதாகத் தமிழ் முரசிடம் பேசிய கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். 

இளையர்களைக் குறிவைக்கும் வாக்குறுதிகள்

‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்களின்வழி திமுக, இளையர்களுடன் தொடர்பை வலுப்படுத்த முனைகிறது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மாணவர்கள் இந்தத் திட்டங்களால் பயனடைகின்றனர். இதன்வழி ஆதரவாளர்களை ஈர்க்க அக்கட்சி முனைகிறது.

அதிமுக, கல்லூரி மாணவர்களுக்கு 35 லட்சம் இலவச மடிக்கணினிகளை வழங்க உறுதியளித்தது. ஐந்து லட்சம் இளையர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கி, அவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முனைவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. இளையர்களுக்குப் புதிதாக 50 லட்சம் வேலைகளை உருவாக்கப் போவதாகவும் அது கூறியது.

தவெக, இதுபோல இளையர்களுக்கும் வாக்குறுதிகளைத் தெளிக்கிறது. இளையர்களை மையப்படுத்தும் இத்தகைய வாக்குறுதிகள், இந்தத் தலைமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

வாழ்க்கைத்தொழில் கனவில் நெருக்கடி

நல்ல வேலைகளை எளிதில் பெற முடியாத சூழலில் இருக்கும் தமிழக இளையர்கள், பலரது கல்வியும் வேலைத் திறன்களும் வலுவாக இல்லாத நிலையில், தங்கள் துன்பங்களை மறக்கடிப்பவர்களுக்காக ஏங்குவதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பொருளியல் பேராசிரியர் அருண் குமார் தெரிவித்தார்.

“சரியான வேலையும் போதிய திறன்களும் இன்றி இந்த இளையர்கள், எல்லாச் சவால்களையும் வெல்லக்கூடிய நாயகரை நாடுகின்றனர். அவர்கள் என்னென்ன செய்ய நினைக்கிறார்களோ, அவற்றை அந்தத் திரை நாயகரால் செய்துவிட முடியும். எனவே, விஜய் படங்களைப் பார்த்துத் தங்கள் துன்பத்திலிருந்து தற்காலிக விடுதலையைப் பெறுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

திரை நாயகர்கள்மீது நெடுநாள் மோகம் கொண்டுள்ள தமிழகத்தில் விஜய்யின் வளர்ச்சி வியக்கத்தக்கதல்ல என மும்பை பிட்ஸ் (BITS) சட்டப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் சந்தீப் முன்ஷி தெரிவித்தார். 

திமுக அரசின் குறைபாடுகளாலும் மக்கள்மீது அக்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரில் சிலர் வெளிப்படுத்தும் அகந்தையாலும் இளையர்கள் அரசியல் களத்தில் புதியவர்களை நாட முற்படுவதாகச் சென்னையின் சவீதா மருத்துவ, தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அரசியல் விஞ்ஞான, அனைத்துலக உறவுகளுக்கான பேராசிரியர் டாக்டர் டி. சி. கார்த்திகேயன் தெரிவித்தார். 

எளிதில் நுழைய முடியாத அரசியல் கட்டமைப்பு

தமிழக வெற்றிக் கழகம் விஜய்யின் ஆளுமையைச் சார்ந்திருக்கும் அமைப்பாக இருந்தாலும், அது அறிவுசார் அரசியல் கொள்கைப் போக்குக்கு எதிரானது எனச் சொல்லிவிட இயலாது என இந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் அளவுக்குத் தமிழகத்தில் குடும்ப அரசியல் இன்னும் வேரூன்றவில்லை என்றாலும், திமுக, அதிமுக ஆகியவற்றின் வட்டங்களுக்குள் ஒருவர் அரசியல் கனவுகளுடன் எளிதில் நுழைந்துவிட முடியாது எனப் பேராசிரியர் முன்ஷி குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் தங்களுக்கான பிரதிநிதிகள் இல்லை என நினைக்கும் இளையர்கள் விஜய்க்கு வாக்களிக்கக்கூடும் என்றார் பேராசிரியர் முன்ஷி.

விஜய்யின் வாக்காளர்களில் சிலர் சமூகச் சேவைகளை ஆற்றி அரசியலைப் படிப்படியாகக் கற்றுவருகிறார்கள் எனப் பேராசிரியர் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

“காலப்போக்கில் அவர்களது அரசியல் அறிவு மேம்படும். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்