தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு: பழனிசாமி மனு தள்ளுபடி

2 mins read
eb23d1bf-dd18-4644-8c88-de480043d708
எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகத் தாம் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனால் இவ்வழக்கில் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயாலாளராகத் தேர்வானார் எடப்பாடி பழனிசாமி.

இதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், பொதுக்குழுத் தீர்மானங்களை எதிர்த்து, தன்னை அதிமுக உறுப்பினர் எனக் கூறிக்கொண்ட சூர்யமூர்த்தி என்பவரும் இந்த வழக்கில் இணைந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர் எனக் கூறி வழக்கு தொடர்ந்த சூர்யமூர்த்திக்கு எதிரான எடப்பாடியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

சூர்யமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் அல்ல என்றும் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆனால், அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதிமுக கட்சி விதிகளின்படி, உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை என்றும் சூர்யமூர்த்தி தரப்பு வாதிட்டது. மேலும், தாம் அதிமுக உறுப்பினர்தான் என்றும் சூர்யமூர்த்தி தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், விதிகளின்படி, பழனிசாமி எவ்வாறு பொதுச் செயலாளரானார் என்பது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

எனவே, பொதுக்குழுத் தீர்மானம் மூலம் பழனிசாமியைத் தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

குறிப்புச் சொற்கள்