சென்னை: சென்னை சாலைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் கேட்பதைத் தடுக்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தின்போது, துணை மேயர் மகேஷ்குமார் இவ்விவகாரம் தொடர்பாகப் பேசினார்.
அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் போக்குவரத்து நிறுத்தங்களில் குழந்தைகளை வைத்து சிலர் யாசகம் கேட்பதைத் தடுக்க அம்மாநில அரசு மரபணுப் பரிசோதனையைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
“குழந்தைக்கும் அதை வைத்து யாசகம் கேட்பவருக்கும் நடத்தப்படும் சோதனையின் மூலம் அக்குழந்தை வேறு ஒருவருடையது எனக் கண்டறியப்பட்டால் , அதை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கின்றனர்.
“அதேபோல், சென்னையிலும் யாசகம் கேட்கும் குழந்தைகளின் மரபணுவைப் பரிசோதிக்க வேண்டும்,” என்றார் மகேஷ்குமார்.
மீட்கப்படும் குழந்தைகளை, மாநகராட்சியின் குழந்தை மீட்பு மையங்களில் பராமரித்து தரமான கல்வியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தபோது, “இது நல்ல திட்டம். இதை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,” என மேயர் பிரியா பதிலளித்துள்ளார்.