தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் மேலும் ஆறு பொருள்களுக்கு புவிசார் குறியீடு

1 mins read
95536a14-02f5-4b99-8ae2-b5c11e5dbb9a
பண்ருட்டி பலாப்பழத்துக்கும் புவிசார் குறியீட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஆறு பொருள்களுக்கு புவிசார் குறியீட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகியவை அந்த ஆறு பொருள்கள்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் ஒவ்வொரு வட்டாரப் பகுதியிலும் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருள்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருள்களை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இதேபோல் அண்மையில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்