தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொள்ளாச்சியிலிருந்து கிளம்பி பாலக்காட்டில் தரையிறங்கிய ராட்சத பலூன்

1 mins read
ae86a925-478a-4dfb-be4b-85af592caf1e
பாலக்காட்டிலுள்ள ஒரு வயல்வெளியில் தரையிறங்கிய வெப்பக் காற்று பலூன். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

பொள்ளாச்சி: தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் வானில் பறக்கவிடப்பட்ட ராட்சத வெப்பக் காற்று பலூன் ஒன்று அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள வயல்வெளியில் தரையிறங்கியது.

பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள ஆச்சிப்பட்டியில் பத்தாவது முறையாக செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) தமிழ்நாடு அனைத்துலக பலூன் திருவிழா தொடங்கியது. தமிழகச் சுற்றுலாத் துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் ஒன்று அந்த மூன்று நாள் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அமெரிக்கா, தாய்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், வியட்னாம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

ராட்சதக் குழந்தை, சிறுத்தை, யானை, ஓநாய் போன்ற வடிவங்களில் இருந்த அந்த பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

சிறிய அளவிலான வெப்பக் காற்று பலூன்களும் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தன.

இந்நிலையில், யானை வடிவிலிருந்த ஒரு ராட்சத பலூன் காற்றால் திசைமாறிப் பறந்துசென்றதால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பலூன் புறப்பட்ட இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி தரையிறங்க வேண்டிய நிலையில், கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு அப்பால், பாலக்காட்டிலுள்ள ஒரு வயல்வெளியில் தரையிறங்கியது.

பின்னர் உள்ளூர்வாசிகளின் துணையுடன் அந்த பலூன் மீட்கப்பட்டு, பொள்ளாச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அதில், பலூனை இயக்கிய இருவருடன், கணவன், மனைவி, இரு குழந்தைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

காற்றால்தான் அந்த பலூன் திசைமாறிப் பறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்