கன்னியாகுமரி: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியிழைப் பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளார்.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், அருகே உள்ள பாறையில் எழுப்பப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் அப்பாலம் அமைகிறது.
அதற்கான பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், டிசம்பர் 30ஆம் தேதிமுதல் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான வெள்ளிவிழா நிகழ்வினை ஒட்டி, கண்ணாடியிழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
பாலத்தின்மீது செல்லும்போது முக்கடலின் அழகினையும் சுற்றுப்பயணிகள் கண்டு மகிழலாம்.