மதுரை: பெண் காவல்துறை ஆய்வாளரின் வீட்டிற்குள்ளேயே மர்ம மனிதர்கள் புகுந்து 450 சவரன் தங்க நகைகளையும் ரூ.5 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த ஷர்மிளா, 42, திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) இரவு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய ஷர்மிளா, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, நிலைப்பேழையிலிருந்த 450 சவரன் தங்க நகைகளும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் களவுபோனது தெரியவந்தது.
அதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் வல்லுநர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்தனர்.
மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது, வீட்டை மோப்பம் பிடித்தபின் அங்கிருந்து சிறிது தொலைவிற்கு ஓடி, பின்னர் நின்றுவிட்டது. சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, மூன்று தனிப் படைகள் அமைத்து, கொள்ளையர்களைத் தேடி வருகிறது.
இதனிடையே, காவல்துறை ஆய்வாளர் வீட்டிலேயே நகைகள் களவுபோன நிலையில், அவற்றின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 கோடி என்பதால், அது மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

