சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 319 நாள்களுக்குப் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வாரம் ஒன்பதாம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.13,255க்கு விற்பனையானது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040க்கு விற்கப்பட்டது.
பத்தாம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.600 குறைந்து ரூ.1,00,320க்கு விற்பனையானது.
திங்கட்கிழமை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ரூ.12,540ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ரூ.99,760க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.12,470க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை; நகைக்கடைகளில் மக்கள் ஆர்வம்
பல மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்குக் கீழ் சரிந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இதனிடையே, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்குக் கீழ் வந்திருப்பதால் நகை வாங்கக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கும் இவ்விலைக்குறைவு சாதகமாக அமைந்துள்ளது.
ஓராண்டிற்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் ஐந்து இலக்கத்திற்குக் குறைந்திருப்பதால் நகைக்கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர்.
வரும் நாள்களிலும் தங்கம் விலை இதேபோல் குறையுமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
