தங்க மோதிரத் திட்டம்: அரசுக்குத் திருமா ஆலோசனை

தங்க மோதிரத் திட்டம்: அரசுக்குத் திருமா ஆலோசனை

1 mins read
ae3f73fe-7ac6-4f4e-a90a-6327a1ddebe8
திருமாவளவன். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் தரும் திட்டத்தை ஒருதரப்பினர் வரவேற்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மோதிரம் வழங்குவதற்குப் பதில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ அறைகளை மேம்படுத்தலாம் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.755 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 56 விழுக்காட்டுக் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறப்பதாகவும் எஞ்சிய 44 விழுக்காடு பிரசவங்கள் தனியார் மருத்துவமனையில் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கபடுவதாகவும் தாய்-சேய் பாதுகாப்பு கருதி ஏழைகளும்கூட தனியார் மருத்துவமனைகளை நாடுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

எனவே, மோதிரம் வாங்கச் செலவிடும் தொகையைக் கொண்டு தனியார் மருத்துவமனையைப் போல் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் உள்ள பிரசவ அறைகளை நவீனமயமாக்குவதுடன் தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதும் பயனளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ‘அப்பாவைக் காணோம்’ என்று கேலி செய்யும் வகையில், சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியது மிகவும் தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

“இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் ‘கணவனைத் தேடும் மனைவி’ என்று பேசியதும் தவறுதான். ‘ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்