திண்டுக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் திண்டுக்கல் பிரமுகரை கேரள மாநில காவல்துறை விசாரணை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பன் கோவிலில் கருவறை முகப்பில் இருபுறமும் தங்கத்தால் ஆன துவார பாலகர்கள் சிலைகள் காணப்படும்.
கடந்த 2019ஆம் ஆண்டு இச்சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்களை செப்பனிடும் பணிக்காக கோவில் நிர்வாகம் சென்னைக்கு அனுப்பி வைத்தது. இதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
தங்கக் கவசங்களை ஒப்படைக்கும் போது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது என கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிந்து கவசம் மீண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்துபோய் இருந்தது. ஏறக்குறைய 4.54 கிலோ தங்கம் மாயமானதால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவானது.
கோவில் முன்னாள் நிர்வாக அதிகாரி சிவகுமார், 400 கிராம் தங்கத்தைத் திருடி கர்நாடகாவைச் சேர்ந்த தங்க வியாபாரியிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
விசாரணையின் போக்கில் தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவரும் எம்எஸ் மணி என்ற சுப்பிரமணியனுக்கும் திருட்டில் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து ஐந்து காவல் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று திண்டுக்கல் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எஸ் மணி, காவல்துறையினர் தம்மிடம் விசாரணை நடத்தியது ஏன் என்று தெரியவில்லை என்றார்.
டி.மணி என்பவர்தான் தேடப்பட்டு வருவதாகவும் தம்மிடம் தவறாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த வழக்கு தொடர்பாக நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க எம்எஸ் மணிக்கு காவல் துறை அழைப்பாணை அனுப்பி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

