சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்தின் குறிப்பிட்ட ஒரு நுழைவாயில் கடத்தல் கும்பல்களுக்காகச் செயல்பட்டு வந்ததை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அது 9வது நுழைவாயில் என்ற விவரத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த 9வது நுழைவாயில்தான் விமான நிலைய அடிப்படைப் பணியாளர்கள் உள்ளே வந்துசெல்லப் பயன்படுத்தப்படுகிறது.
விமான நிலையத்தின் பல்லாவரம் பகுதியில் அமைந்திருக்கும் அந்த நுழைவாயில் உணவு ஒப்பந்ததாரர்கள், எரிபொருள் வழங்குவோர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் வந்து செல்லப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இவர்களுடன் மோசடிக் கும்பல் கைகோத்து தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தும் வழியாக மாற்றியிருக்கிறார்கள் என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து பயணிகள் இந்தியாவுக்குக் கடத்தி வரும் விலை மதிப்பற்ற தங்கம் உள்ளிட்ட பொருள்களை எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியே கொண்டு வர அந்த நுவைாயில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
“கடந்த வாரம்கூட விமானநிலைய உந்துவண்டி ஓட்டுநர் பி தீபக்கும் விமான நிலையப் பணியாளர் பேச்சிமுத்துவும் தங்கக் கடத்தலுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டனர்.
“ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.2 கிலோ தங்கத்தை அந்த இரு ஊழியர்களும் 9வது நுழைவாயில் வழியாகக் கடத்திச் சென்றபோது பிடிபட்டனர்.
“துபாய் பயணி ஒருவரின் தங்கக் கடத்தலுக்கு அவர்கள் உதவிசெய்தது தெரிய வந்தது,” என்று விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்ட இருவரும் ஏஐ ஏர்போர்ட் சர்வீசஸ் என்னும் விமான நிலைய குத்தகை நிறுவனத்தின் பணியாளர்கள் என்றும் அவர்கள் கூறினர்.