195 நாள்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு; 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு

195 நாள்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு; 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு

கோப்புப் படம்: தினமணி

22 Nov 2026 - 3:54 pm

1 mins read

சென்னை: தவெக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 195 நாள்களில் தமிழ்நாடு ரூ.1.14 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தொழில்துறை தெரிவித்துள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் விஜய் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் மூலம் முதலீடுகள் குவிந்தன. இதையடுத்து, வரும் 25ஆம் தேதி இரண்டாவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

தொழில் துறை வெளியிட்ட விவரப்படி, கடந்த 195 நாள்களில் 23 துறைகளில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் 35 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வாகன உற்பத்தித் துறையில் ரூ.17,073 கோடி, மின்னணுவியல் துறையில் ரூ.16,832 கோடி, ஜவுளித் துறையில் ரூ.7,871 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய திறன் மையங்கள் வாயிலாக 5,870 பேருக்கு உயர் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

மொத்தமுள்ள 112 திட்டங்களில் 83 திட்டங்களுக்கு நிலம் உறுதி செய்யப்பட்டுள்ளன; 23 திட்டங்கள் அடிக்கல் நாட்டும் நிலையையோ அடுத்த நிலையையோ கடந்துள்ளன. இதன்மூலம் திட்டச்செயலாக்க முன்னேற்றம் 74.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தொழில் தொடங்குவதை எளிதாக்கத் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 11 துறைகளில் 25க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு 21 வேலை நாள்களுக்குள் அனுமதி வழங்கும் புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்