மது அருந்த வேண்டாம் என்றுதான் அரசு கூறுகிறது: அமைச்சர் ரகுபதி

1 mins read
36b0293e-d410-4db4-b1b4-a5217e72dd36
அமைச்சர் ரகுபதி. - படம்: ஊடகம்

சென்னை: மது அருந்த வேண்டாம் என்றுதான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அண்மையில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றார்.

“தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை. எனவே, தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் மதுப்பிரியர்கள் அருகே உள்ள புதுவை மாநிலத்துக்குச் சென்று மரு அருந்த நேரிடும்.

“மதுவால் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றால், அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்,” என்று கேள்வி எழுப்பினார் ரகுபதி.

டாஸ்மாக் கடையில் மது அருந்திய யாரும் உயிரிழந்ததாக இதுவரை எந்தப் புகாரும் எழவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு ஏதேனும் ஒரு கிராமத்தில் இருந்தாவது புகார் வந்துள்ளதா என்றும் கேட்டார்.

இதற்கிடையே, பாஜக சார்பாக டாஸ்மாக் நிறுவனத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் விசிக நிலைப்பாடு என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்