அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்:12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிப்பு

அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்:12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிப்பு

படம்: இந்து தமிழ் திசை

26 Aug 2026 - 3:50 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் அரசு ‘கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்’களை ரீசார்ஜ் செய்ய முடியாததால், சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 12 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.200 கட்டணத்தில் 200க்கும் மேற்பட்ட ஒளிஅலைகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

தனியார் நிறுவனங்கள் மாதம் ரூ.250க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால், மக்கள் அரசு கேபிள் டிவியை விரும்புகின்றனர்.

அரசு கேபிள் டிவிக்குச் ‘செட் டாப் பாக்ஸ்’கள் விநியோகம் மற்றும் சர்வர் பராமரிப்பைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாகப் புதிதாகச் சேரும் சந்தாதாரர்களுக்குச் ‘செட் டாப் பாக்ஸ்’களைப் பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடியவில்லை.

அதேபோல், சேவையை வேண்டாம் என்பவர்களுக்கு இணைப்பைத் துண்டிக்கவும் முடியவில்லை.

இப்பிரச்சினையால் பழுதடைந்த பெட்டிகளைக் கூட மாற்ற முடியவில்லை.

இதேநிலை நீடித்தால் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம் உள்ளதாக ஆபரேட்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலுவைத்தொகை இருந்ததால், தனியார் நிறுவனம் ஒளிபரப்புச் சேவையை முடக்கியது,” என்று கூறிய அவர்கள், “நீதிமன்ற உத்தரவையடுத்து மீண்டும் சரிசெய்யப்பட்டு அலைவாங்கி (சிக்னல்) பிரச்சினை இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வந்தது,” என்றனர்.

தற்போது ‘செட் டாப் பாக்ஸ்’கள் விநியோகிக்கும் நிறுவனத்திற்கு அரசு முறைப்படி பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
தனியார்நிர்வாகம்ஒளிபரப்புகட்டணம்