தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை

தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை

1 mins read
4df2b921-25df-4454-a4cc-2c2dc190a352
கேரளாவில் சில கள்ளுக்கடைகளுக்கு, தமிழகத்திலிருந்து சாராயம் கொண்டுசெல்வதாகத் தெரியவந்துள்ளதாகவும் அதனால்தான், கள்ளுக்கடைகளைத் தமிழகத்திலும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் திரு விக்னேஷ் கூறினார். - கோப்புப் படம்: சிபிபிஆர்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறப்பது குறித்து, ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளுக்கடைகளைத் திறப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கேரளாவில் சில கள்ளுக்கடைகளுக்கு, தமிழகத்திலிருந்து சாராயம் கொண்டு செல்வதாகத் தெரியவந்துள்ளதாகவும் அதனால்தான், கள்ளுக்கடைகளைத் தமிழகத்திலும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் திரு விக்னேஷ் கூறினார்.

இதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், முதல்வரிடமும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது.

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு நிலவும்போதிலும் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதுதொடர்பாகப் பனை, தென்னை விவசாயிகள் அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள், கள்ளுக்கடைகளைத் திறக்க அனுமதிக்காதபோது தவெக அரசு அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக அறிவித்திருப்பது பனை, தென்னை விவசாயிகள் இடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறாக இருக்கும் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் கண்டறியப்பட்டு விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்