சென்னை: அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு ஜனநாயக மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி பாலகிருஷ்ணன், “நீண்ட காலமாக நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தினோம். அவர் 19ஆம் தேதி இதுகுறித்து நிதித்துறைச் செயலாளர் இடம் பேசி முடிவு அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
“19ஆம் தேதி எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் 20ஆம் தேதி முதல், தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும். பின்னர் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம். அதனைத் தொடர்ந்து சாகும் வரை போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
“எனவே பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொங்கலுக்குள் எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா என பார்ப்போம். பொங்கலுக்குப் பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்,” என்று கூறினார்.

