சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் நியமனம் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவரும் மருத்துவருமான எஸ்.பெருமாள் பிள்ளை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது என்றாலும், அரசு மருத்துவர்களின் பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்றார் அவர்.
அதிக பணிச்சுமை, சிரமங்கள், பல்வேறு சவால்களுடன் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட பெருமாள் பிள்ளை, இளம் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.
கொரோனா, பேரிடரின்போது பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா அரசு வேலை கேட்டு குழந்தைகளுடன் சுகாதாரத் துறை அமைச்சரை மூன்று முறை நேரில் சந்தித்தும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டும் அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட தமிழகத்தில் அடிப்படை ஊதியம் ரூ.40 ஆயிரம் குறைவாக வழங்கப்படுவதாகவும், ஊதிய உயர்வு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
“எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 18ஆம் தேதி முதல் முதல்வருக்கும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.
“19ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டம், மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை என அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும்,” என்றார் திரு பெருமாள் பிள்ளை.


