சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இனி அரசு ஊழியர்கள் நினைத்தபோதெல்லாம் வெளிநாடு பறக்கலாம். இதற்கேற்ப விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதை அரசு அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அரசு ஊழியர்களை மகிழ்ச்சியூட்டும் அடுத்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
முன்பு அரசு ஊழியர்கள் கடப்பிதழ் பெறுவது, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது ஆகியவற்றுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. அரசு ஊழியர் ஒருவர் எதற்காக வெளிநாடு செல்கிறார், எந்த நாட்டுக்குச் செல்கிறார், எவ்வளவு நாள்கள் வெளிநாட்டில் தங்கியிருப்பார் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
இத்தகைய கட்டுப்பாடுகளால் ஊழியர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. சிலர் உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்த நடைமுறையை மாற்றக்கோரி தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றைப் பரிசீலித்த அரசு, ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கான விதிகளை தளர்த்தி உள்ளது.
இனி புது கடப்பிதழ் பெறுவதற்கும் கடப்பிதழை புதுப்பிக்கவும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கேட்கும் தடையில்லாச் சான்றிதழ் உடனுக்குடன் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், வெளிநாடு செல்லும் அரசு ஊழியர்கள் அங்கு வேலை தேடக் கூடாது எனவும் அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

