சென்னை: தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ நலத்திட்டத்தின்மூலம் அரசு மருத்துவமனைகளை நோக்கிவரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதைச் சிறப்பாகக் கையாள்வதற்கான முழு மருத்துவக் கட்டமைப்பும் தயாராய் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 6.31 லட்சம் பிரசவங்களைக் கையாள முடியும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலும் அதிகமான நோயாளிகளைக் கையாளப் போதிய கட்டமைப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அவற்றுக்குப் கடந்தகாலப் புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்துள்ளார் அமைச்சர் அருண்ராஜ்.
2015-16ஆம் ஆண்டில் மாநிலத்தில் நடைபெற்ற மொத்த 9.47 லட்சம் பிரசவங்களில், அதிகபட்சமாக 6.31 லட்சம் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2025-26ஆம் ஆண்டில் மொத்தப் பிரசவங்களின் எண்ணிக்கை 7.80 லட்சமாகக் குறைந்த நிலையில், அரசு மருத்துவமனைப் பிரசவங்கள் 4.15 லட்சமாக மாறியுள்ளன.
எனவே, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தால் பிரசவங்கள் அதிகரித்தாலும் அரசு மருத்துவமனைகளால் ஆண்டுக்கு 6.31 லட்சம் பிரசவங்கள் வரை எளிதாகக் கையாள முடியும் என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் மகப்பேற்று மருத்துவர்கள், தாதியரின் எண்ணிக்கை, நவீன உள்கட்டமைப்புகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவசரகால மகப்பேறு, குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி வழங்க ‘சீமாங்க்’ (CEmONC) நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருவதாகத் திரு அருண்ராஜ் கூறினார்.
மேலும், பொதுமக்களின் சுகாதாரம், தாய்-சேய் நலனைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகளை வழங்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
