புதுடெல்லி: இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது இந்திய அரசு.
இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனா, பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு ஆண்டுதோறும் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களுக்கு மூன்று பிரிவுகளின்கீழ் பத்ம விருதுகளை அளித்து வருகிறது.
கலை, அறிவியல், சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், பாடகர் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 25 ஆம் தேதியன்று பத்ம விருதுகள் பெரும் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ரெட்டி உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே போல் தமிழகத்தைச் சேர்ந்த நல்லி குப்புசாமி, சோபனா, ஆந்திராவின் நந்தமூரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட 19 பேர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த குருவாயூர் தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையன் (தினமலர் ஊடகம்), எம்.டி.சீனிவாஸ், புரிசை கண்ணப்பா, சம்பந்தன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, சீனி விஸ்வ நாதன், வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பத்ம விருதுகள் பட்டியலில் 23 பெண்கள், 10 வெளிநாட்டினர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டுக்கான தனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டதை பாக்கியமாகக் கருதுவதாக நடிகர் அஜித் கூறியுள்ளளார்.
மேலும் இந்த அங்கீகாரம் தனக்கானது மட்டுமல்ல என்றும், இதை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.