அதிகக் காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின்

2 mins read
d1a3af00-a87d-453e-91ff-a759e712aaf7
அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் விழா மேடையில் வெளியிட்டார். - படம்: தினமலர்

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிகக் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வியாழக்கிழமை அவனியாபுரத்திலும், வெள்ளிக்கிழமை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

அடுத்ததாக, சனிக்கிழமை (ஜனவரி 17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. அந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண காலை 11.10 மணியளவில் விழா மேடை திடலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என். நேரு, மதுரை எம்.பி. வெங்கடேசன், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோரும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண அலங்காநல்லூர் வந்திருந்தனர்.

போட்டியைக் கண்டுகளித்த முதல்வர் ஸ்டாலின், சிறப்பான ஆட்ட்டதை வெளிப்படுத்திய காளைகளின் உரிமையாளருக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அலங்காநல்லூரில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாடுபிடி வீரர்கள் நீண்டநாள்களாக முன்வைத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை அடக்கும் சிறந்த வீரருக்கு கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அவரின் அந்த அறிவிப்புகள் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் விழா மேடையில் வெளியிட்டார்.
அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் விழா மேடையில் வெளியிட்டார். - படம்: த ஹிந்து
குறிப்புச் சொற்கள்