அரசு மருத்துவமனைகளில் 18 தீவிர சிகிச்சைப்பிரிவுகள்; தமிழகத்துக்கு ரூ.151.35 கோடி ஒதுக்கீடு

1 mins read
2f9af6b0-04da-48d8-b784-f1d120c00afc
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18 தீவிர சிகிச்சைப்பிரிவுகள் உருவாக்கப்படுகின்றன.

பிரதமரின் தேசிய சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள இந்த தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமையன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தீவிர சிகிச்சைப்பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சின் சார்பில் இந்த தீவிர சிகிச்சைப்பிரிவுகளைக் கட்டமைக்க பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.17,201 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், தமிழகத்தின் திட்ட மதிப்பீடு ரூ.151.35 கோடி என்றும் ஒவ்வொரு பிரிவிலும் 50 முதல் 100 படுக்கைகள் இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.

அனைத்துப் பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், உயிர் வாயு வசதியுடன் கூடிய படுக்கைகள், செயற்கை சுவாசக்கருவிகள் உள்ளிட்ட உயிர் காக்கும் அமைப்புகள் இருக்கும்.

மேலும், இந்த பிரிவுகளில் பணியாற்றும் சுகாதார நிபுணர்களுக்கு அவசர கால மருத்துவ மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பின்னர் அத்தகைய பயிற்சி அளிக்கும் மையமாக இந்தப் பிரிவுகள் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்