புதுக்கோட்டை: வானில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்து மகிழும் ஏழைக் குழந்தைகளுக்கும் விமானத்தில் ஏறிப் பறக்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆனால், பெரும்பாலானோருக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், விமானத்தில் ஏறிப் பறக்க வேண்டும் என்ற குழந்தைகள் சிலரது கனவை தமிழக அரசுப் பள்ளி ஒன்று நனவாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் உள்ள சேதுராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புத் தேர்வும் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் விமானச் சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டதும் மாணவர்கள் இடையே குதூகலம் ஏற்பட்டது.
போட்டியின் முடிவில் ஒவ்வொரு வகுப்பிலும் தலா இருவர் என மொத்தம் 12 மாணவ, மாணவிகள் விமானப் பயணத்துக்குத் தேர்வாகினர்.
இதையடுத்து, சனிக்கிழமை (பிப்ரவரி 7) காலை இந்த மாணவர்கள் திருச்சி அனைத்துலக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெங்களூரில் கர்நாடக சட்டமன்றம், திப்பு சுல்தான் அரண்மனை, அரும்பொருளகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த மாணவர்கள், அந்நகர மக்களிடமும் உரையாடி மகிழ்ந்தனர்.
இந்தப் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகருப்பன், “இதுபோன்ற சுற்றுலாக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும். மற்ற மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும்,” என்று கூறினார்.

