மதுரை: மக்கள் நல அரசு என்பது பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனத்துடன் பாடுபட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
மக்கள் நல அரசு, ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் டாஸ்மாக் கடைகளையும் ஒருசேர நிறுவுவது முரண்பாடானது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பாமக, மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், ஆண்டுதோறும் டாஸ்மாக் மதுவிற்பனை அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. மதுக்கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது எந்த தீங்கையும் விளைவிக்காது என்றும் மாறாக பொதுமக்களுக்குப் பெருமளவில் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
“மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும்தான் அரசின் முதன்மையான கடமை. மருத்துவ நோக்கங்களை தவிர போதைப்பொருள் மற்றும் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் மருந்துகளை உட்கொள்வதை தடை செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும்,” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
மேலும், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படுவதை மக்கள் நல அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.