சென்னை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், நடப்பாண்டில் சுமார் 68,000 வீடுகளைக் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக ரூ.209 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதும் கூடுதலாக இரண்டு கோடி புதிய வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதில் 2024-25 நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றும் மத்திய அரசு ஒரு வீட்டுக்கு நிர்வாகச் செலவுகள் தவிர்த்து ரூ.1.20 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளதாகவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 60 விழுக்காடு, மாநில அரசு 40 விழுக்காடு தொகைகளை ஒதுக்கீடு செய்து இந்த வீடுகளைக் கட்ட வேண்டும் என்றும் இதற்கு மொத்தமாக ரூ.836 கோடி செலவாகும் என்றும் அவர் அரசுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட பல வீடுகள் ரத்து செய்யப்பட்டதால், தமிழக அரசு இத்திட்டத்துக்காக, இந்த ஆண்டு ரூ.83.68 கோடி ஒதுக்க வேண்டுமெனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பைக் கருத்தில்கொண்டு மொத்தம் ரூ.209 கோடி நிதியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசிடம் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கோரிக்கை விடுத்தார் என்றும் இதைக் கவனமாக பரிசீலித்த தமிழக அரசு அந்த தொகையை முதல் தவணையாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது என்றும் தமிழக அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

