சென்னை: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தினர் கலைச்சொற்களை உருவாக்கி அவற்றை இணைய வழியில் அறிமுகப்படுத்துவது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில், கலந்துகொண்டு பேசிய உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநரான இரா.மனோன்மணி உரையாற்றுகையில், குழந்தைகளிடம் இருந்து தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டைத் தொடங்க வேண்டும்.
தமிழ் மொழியை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனில், அது நம் குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும். எனவே, பிள்ளைகள், தங்கள் மழலைக் கல்வியைத் தொடங்கும்போதே தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு தாய் மொழி மீது பற்றை ஏற்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.
முக்கியமாக தமிழ் நாடு அரசு அதன் அனைத்து அரசாணைகளையும் மடல்களையும் தமிழிலேயே வெளியிட வேண்டும். என்றார் அவர்.
அதேபோல் அரசாங்க, தனியார் அலுவலகங்கள், தனி யார் நிறுவனங்களிலும் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனோன்மணி, கடைகள், நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் கண்டிப்பாகத் தமிழில் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதுவே தமிழ் வளர்ச்சித்துறையிடம் தாம் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கை என்றும் கூட்டத்தில் பேசிய மனோன்மணி குறிப்பிட்டார்.


