சென்னை: தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (ஏஐ) பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும் அதை கண்காணிக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த், தொழிலகங்களில் சிறு விபத்து நடந்தாலும், அதுகுறித்து விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“அதேபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நிகழாமல் தடுக்க, விபத்துக்கான உண்மையான மூல காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்த ஒரு விதிமீறலுக்கும் தொழிற்சாலையின் உரிமையாளரும் மேலாளரும்தான் பொறுப்பாவார்கள்.
“எனவே, பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்,” என்று திரு. ஆனந்த் மேலும் கூறினார்.

