சென்னை: கன்னியாகுமரி கடலில் உள்ள இரண்டு பாறைகளில் ஒன்றில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
1.1.2000ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். இந்தச் சிலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் தனித்துவமான சிறப்பைப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி கடல் பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் திங்கட்கிழமை (டிசம்பர் 23) முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் உள்ள கண்ணாடிக் கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்தப் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. அந்தக் கண்ணாடிக் கூண்டுப் பாலத்தை டிசம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
இதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா களை கட்டி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கண்காட்சியில் திருவள்ளுவரின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. மாணவ-மாணவிகள் வரைந்த திருவள்ளுவரின் பல்வேறு வகையான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மாணவர் வரைந்த படம் திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தத் திருவள்ளுவர் படத்தை அந்த மாணவர் காவி உடையுடன் வரைந்து இருந்தார். திருவள்ளுவர் படத்துக்குக் காவி நிறம் பூசப்பட்டு இருப்பது சரியானது அல்ல என்று கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் விமர்சித்தனர்.
கடந்த ஆண்டு காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை ஆளூநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அதேபோன்று காவி உடையில் திருவள்ளுவர் படம் இருந்ததால், கண்காட்சியில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த திருவள்ளுவர் படம் கண்காட்சி அரங்கில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது.