2016 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் 1.45 மில்லியனுக்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் உள்ளிட்ட இணையக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை இனி ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணம் இருக்குமே தவிர, குறைய வாய்ப்பு இல்லை என்கிறார்கள் இணைய பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையக் குற்றங்களைக் கண்டுபிடிக்கவும் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது நாடு முழுவதும் இணைய மோசடிகாரர்களைக் கண்டுபிடிக்க சைபர் கிரைம் காவல் நிலையங்களை அமைப்பது தீவிரமாகியுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதற்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, காவல் உதவி ஆய்வாளர் தொடங்கி, ஆய்வாளர் வரை காவல்துறையில் பணியமர்த்தப்பட 185 பொறியாளர்கள், மாநில காவல்துறையால் அப்போது அடையாளம் காணப்பட்டனர்.
இந்த பொறியாளர்கள் இணையக் குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டு தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர். இணையக் குற்றங்களில் ஈடுபடுவோரும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதால், அவர்களை எதிர்கொள்ள சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கடுமையான பயிற்சித் திட்டத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் – சென்னை (ஐஐடி), தனியார் கல்லூரியுடனான கூட்டு முயற்சியின் ஓர் அங்கமாக இந்தப் பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்த அதிகாரிகள் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள 46 இணையத் குற்றத்தடுப்பு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழக அரசு:
தொடர்புடைய செய்திகள்
இணையக் குற்றப்பிரிவில் பணியாற்றும் நிபுணத்துவம் பெற்ற காவல் அதிகாரிகளின் எண்ணிக்கை இனிவரும் நாள்களில் தொடர்ந்து அதிகரிக்கும்.
மறுபக்கம், இணையக்குற்றங்கள் தொடர்பாக பொது மக்கள் இடையே விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தமிழக அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
சிறு கவனக்குறைவு, தேவையற்ற உரையாடல், சில மறைச்சொற்கள், எண்கள் (பாஸ்வோர்டு – பின் நம்பர்) ஆகியவற்றைப் பகிர்வதன் காரணமாகவே, பெரும்பாலான இணையக்குற்றங்கள் அரங்கேறுகின்றன. எனவே, இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 285 பள்ளிகள், 272 கல்லூரிகள், 3,157 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இணைய மோசடி தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்குப் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்:
மேலும், இணையக் குற்றங்களைத் தடுக்கும் விதமாக, புதிய செயலிகள் (அப்ளிகேஷன்) உருவாக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களின் எண்ணிக்கையைத் தடுக்க முடியும் என இந்திய அரசு கருதுகிறது.
“பெரும்பாலான குற்றங்கள் காவல்துறையின் கவனத்துக்கு வருவதில்லை. பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து பலர் வெளிப்படையாகப் புகார் அளிப்பதில்லை,” என்கிறார் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஎஸ்ஆர்சிபி) இயக்குநர் காளிராஜ்.
எனவே, இணையம் வழி அரங்கேறும் 24 வகையான முக்கிய குற்றங்களை இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
சட்ட விரோதப் பரிமாற்றம், தொலைபேசி மூலமான மிரட்டல்கள், சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மின்னிலக்கப் பண மோசடி, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொது மக்கள் உடனடியாக புகார் அளிக்க 1930 என்ற சிறப்பு எண்ணை இந்திய அரசு அறிவித்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் இந்தி தெரியாமல் மோசடி வேலைகளில் ஈடுபட இயலாது என்பதால் இணையக் குற்றக் கும்பல்கள் பல படித்த இளையர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, மோசடிகளில் ஈடுபடச் செய்கிறார்கள்.
இவ்வாறு உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஏறக்குறைய மூவாயிரம் இளையர்கள் வெளிநாடுகள் சென்று மோசடிக்காரர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளளனர்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் இணையக் குற்றங்கள்:
இணைய வெளியில் உலவும் பல மோசடிக்காரர்கள் சென்னை, கோவை போன்ற கட்டமைப்புள்ள நகரங்களைத்தான் அதிகம் குறி வைப்பதாக தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், சிறு நகரங்களில் உள்ள பலரும் குறிவைக்கப்படுகிறார்கள்.
நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 1,679 இணையக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிதி மோசடி தொடர்பாக 1,589 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்தம் 189 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை வழி தெரிவித்தது.
இதேபோல் இணையக் குற்றவாளிகள் கோவையில் மட்டும் பல்வேறு மோசடிகள் மூலம் ரூ.93 கோடி சுருட்டியுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் கோவையில் இணையக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இணைய மோசடி மூலம் கோவையில் ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2022ல் இந்த தொகை ரூ.13 கோடியாகவும், 2023ஆம் ஆண்டு ரூ.48 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பாண்டு நவம்பர் வரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் சரிபாதி தொகை (ரூ.49 கோடி) மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சைபர் கிரைம் பிரிவுக்கு இந்த ஆண்டு 6,798 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் பேரில் 255 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 41 பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் 7 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கூடுமானவரை அதிக லாபம் ஈட்டும் முதலீட்டு விளம்பரங்கள் அல்லது அதிகம் அறியப்படாத முதலீட்டுப் பயன்பாடுகள், இணையத்தளங்களை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கை தேவை என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்பின் தெரியாத வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இணையவழி பாதுக்காப்புக்கான முதன்மைக் கூறுகள்:
செயலி பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, (டிசாஸ்டர் ரிகவரி), வலையமைப்பு பாதுகாப்பு (நெட்வொர்க்) ஆகியவையே இணையவழி பாதுகாப்புக்கான முதன்மைக் கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இணைய ஊடுருவல்காரர்களின் நோக்கதைப் பொறுத்து, இணையத் தாக்குதல்கள் நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இணையவழி உளவு (ஸ்பை), இணையக் குற்றம், இணைய பயங்கரவாதம், இணைய வழியிலான போர் ஆகியவையே முக்கியமான நான்கு இணையக் குற்ற வகைகளாகும்.
பழைய கருவிகள், புது வகை குற்றங்கள்:
இணைய மோசடியில் ஈடுபடுபவர்கள் பழைய கருவிகள், வழிமுறைகளைப் பின்பற்றி புது வகை குற்றங்களில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம் இந்த குற்றவாளிகள் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த தவறுவதில்லை என்கிறார் அவர்.
“ஒரே ஒரு தவறான தொலைபேசி அழைப்பு, சிறு செய்தியின் மூலம் ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்க நேரிடுகிறது.
“செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்துடன் குற்றவாளிகள் ஈடுபடும் குற்றங்கள் புதியவை என்றாலும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகள் நமக்கு நன்கு தெரிந்தவையாகவே உள்ளன,” என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.