புதுடெல்லி: இந்திய அளவில் ஊராட்சிகளின் செயல்பாடுகள், திறன் மேம்பாடு, நிதிப் பரிவர்த்தனையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஊராட்சிகளுக்கான அதிகாரப் பகிர்வு குறியீட்டுத் தரவரிசையில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளைச் செயல்படுத்தும் விதத்திலும் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, செயல்முறைபடுத்தும் கணக்கீட்டின்படி தமிழ்நாடு அதிக மதிப்பெண்களையும் திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
நிதிப் பரிவர்த்தனையை பொறுத்தவரை தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக ஊரகத் திட்டங்களில் ஊராட்சிகளின் ஈடுபாடு மிக உயர்ந்த தரத்தில் உள்ளதை மத்திய அரசின் ஆய்வு அறிக்கை எடுத்துக் காட்டுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஊரக, உள்ளாட்சிகளில் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகளின் திறன் மேம்பாடு, அதிகாரிகளுக்கான பயிற்சியை வழங்குவதிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாகத் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.