செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த ஆளுநர் அனுமதி

செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த ஆளுநர் அனுமதி

2 mins read
7dc08585-58fd-46b4-bbdb-0be161c2ea87
செந்தில் பாலாஜி. - படம்: மாலை மலர்

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கைத் தொடர்ந்து நடத்த, அமலாக்கத் துறைக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் அனுமதி அளித்துள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011 முதல் 2016 வரை, அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி.

அப்போது அத்துறையில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செயலுக்கான குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும், வழக்கை நடத்த மாநில அரசின் அனுமதி தேவை.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது தவெக ஆட்சி அமைந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அனுமதி கோரி தமிழக அரசு ஆளுநர் அர்லேகருக்குக் கடிதம் அனுப்பியது.

அதை ஏற்று, அவர் தற்போது அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.

இந்தப் பண மோசடி வழக்கில் கடந்த 2023 ஜூன் 14ல், அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியைக் கைது செய்தது. ஏறக்குறைய 15 மாதங்கள் சிறையில் இருந்த அவரை, உச்ச நீதிமன்றம் பின்னர் பிணையில் விடுவித்தது.

அமலாக்கத்துறை இந்த வழக்கைத் தொடுத்தபோது மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, குற்றச்சாட்டில் சிக்கியவர் ‘பொது ஊழியர்’ என்றால், அவர் மீதான வழக்கைத் தொடர்ந்து நடத்த, சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற்றாக வேண்டும்.

அதன்படி, வழக்கை நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அக்கடிதத்தை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்