தனியார் பல்கலைக்கழக விதிகளைத் தளர்த்தும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

தனியார் பல்கலைக்கழக விதிகளைத் தளர்த்தும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

22 Nov 2026 - 5:15 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான நிலம், நிதி சார்ந்த விதிமுறைகளைத் தளர்த்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா, 2026’க்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தத் தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் சனிக்கிழமை (நவம்பர் 21) சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அனைத்துலகத் தரத்திலான கல்வி வசதிகளை இங்கேயே வழங்குவதே இச்சட்டத் திருத்தத்தின் முக்கியமான நோக்கமாகும். இதன்மூலம் அந்நியச் செலாவணி வெளியேறுவதும் தடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

தனியார் பல்கலைக்கழகம் அமைக்கக் குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கரிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 12 ஏக்கராகவும் இதர மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 18 ஏக்கராகவும் பிற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டாய நிரந்தர வைப்பு நிதி ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இச்சலுகை ஏற்கெனவே செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்.

இந்த மசோதாவை அதிபரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பியதாகக் கூறப்பட்ட தகவலை மறுத்த அமைச்சர், ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தெளிவுபடுத்தினார்.

எனினும், இந்த விதிமுறைத் தளர்வுகள் உயர்கல்வி வணிகமயமாவதற்கு வழிவகுக்கும் என கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்